ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு, அதாவது இன்றைய மதிப்பில் ரூ.14,500 கோடி சேதம் ஏற்பட்டிருக்கலாம் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அண்ணாமலை, இந்த புத்தகம் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துவதாக கூறினார்.
ராணுவ வீரர்களின் பணியை பொதுமக்கள் தொடர்ந்து பாராட்ட வேண்டும் என்றும், இந்நூல் இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யும் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.3,887 கோடி செலவு?
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக இந்தியா சுமார் 408 மில்லியன் டாலர், அதாவது ரூ.3,887 கோடி செலவு செய்ததாக ஒரு ஆய்வறிக்கை கூறுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் பாதுகாப்புத் திறன் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால், பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான வளங்களை அதிக அளவில் வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா – பாகிஸ்தான் பொருளாதார ஒப்பீடு
இந்தியாவின் பொருளாதாரம் தற்போது சுமார் 4.1 டிரில்லியன் டாலர் அளவில் இருப்பதாகவும், பாகிஸ்தானின் பொருளாதாரம் சுமார் 375 பில்லியன் டாலர் அளவில் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இரு நாடுகளின் பொருளாதார வலிமையை ஒப்பிட்டுப் பேசிய அவர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் அதிகம் என்றும் கூறினார்.
“பாகிஸ்தானுக்கு ரூ.14,500 கோடி சேதம்”
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சுமார் 1.5 பில்லியன் டாலர், அதாவது ரூ.14,500 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அண்ணாமலை தெரிவித்தார்.
பாகிஸ்தானின் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் சேதமடைந்த ராணுவ தளவாடங்களுக்கு பதிலாக மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், பாகிஸ்தான் தனது ராணுவ பயன்பாட்டிற்கான சில விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை சார்ந்திருப்பதாகவும் அண்ணாமலை தனது உரையில் குறிப்பிட்டார்.
