தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) சமீபத்தில் இணைந்த லோக்சபா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் காலை உணவு விருந்து அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், திரிணமுல் காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் கூட்டணியில் இணைந்த எம்.பி.க்கள், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த எம்.பி.க்கள் உள்ளிட்ட மொத்தம் 45 பேர் பங்கேற்றனர்.
“பார்லிமென்ட் ஜனநாயகத்தின் உன்னத கோவில்”
எம்.பி.க்களுடன் உணவருந்தியபடியே கலந்துரையாடிய பிரதமர் மோடி, பார்லிமென்ட் ஜனநாயகத்தின் முக்கியமான அமைப்பு என்றும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக புதிய எம்.பி.க்களுக்கு அவையில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.
பார்லிமென்ட் நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், பார்லிமென்டின் வரலாற்றை எம்.பி.க்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அங்கு பாதுகாக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் விவாதங்களைப் பயன்படுத்தி தங்களது நாடாளுமன்றப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்றும், மாநிலங்கள் முன்னேறினால் மட்டுமே நாடு ஒட்டுமொத்தமாக முன்னேறும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குடும்பம் போன்றது. ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் உரிய மரியாதையும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு எம்.பி.யும் எனக்கு முக்கியம்” என்று அவர் தெரிவித்தார்.
“நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்”
புதிதாக கூட்டணியில் இணைந்த எம்.பி.க்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, அவர்கள் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றும், தான் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தங்களது தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக எந்த நேரத்திலும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக, ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கும் பிரதமர் மோடி இதேபோன்று விருந்து அளித்து ஆலோசனைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
