சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்டுள்ள கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்காது என ஈரான் எச்சரித்துள்ளது.
மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் சமீபத்தில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் சபா அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
“மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்” என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மற்ற இரு நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வளம் கொண்ட சவுதி அரேபியா, அணு ஆயுத திறன் கொண்ட பாகிஸ்தான் மற்றும் நேட்டோவில் முக்கிய ராணுவ சக்தியாக விளங்கும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கூட்டு பாதுகாப்பு கட்டமைப்புக்குள் வந்துள்ளன.
ஈரான் கடும் விமர்சனம்
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நெருக்கமான உறவை வைத்திருந்த போதிலும் சவுதி எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமும் வெறும் காகித ஒப்பந்தமாகவே இருக்கும் என்றும், அது சவுதி அரேபியாவுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்காது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் பாதுகாப்புக்காக பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படாத வகையில் சவுதி அரேபியா தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
