வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் எப்ஆர்சிஏ (FCRA) சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தம் குறித்து அமெரிக்க எம்.பி. விமர்சனம் தெரிவித்த நிலையில், இந்தியா அதற்கு பதிலளித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நன்கொடைகள் யாரால் வழங்கப்படுகின்றன, அவற்றின் நோக்கம் என்ன, இந்தியாவில் எந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படையாக அறியும் வகையில் எப்ஆர்சிஏ சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சட்டத் திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க எம்.பி. விமர்சனம்
இந்த சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி. ரிலே மூர் விமர்சனம் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், கல்வி மற்றும் மத அமைப்புகளின் செயல்பாடுகளில் அரசு கட்டுப்பாடு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, தேவாலயங்கள் மற்றும் மத அடிப்படையிலான அறக்கட்டளைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா பதிலடி
இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எப்ஆர்சிஏ தொடர்பாக அமெரிக்க எம்.பி. தெரிவித்த கருத்துகளை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளதாக கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த சட்டங்கள் மற்றும் சட்டமியற்றும் நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் என்றும், அவை குறித்து முடிவெடுப்பது இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு நன்கொடைகள் இந்தியாவுக்கு மட்டும் உரிய விவகாரம் அல்ல என்றும், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை கொண்டுள்ளன என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் சுட்டிக்காட்டினார்.
