தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு சினிமா மற்றும் கலைத்துறை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, கோவில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், அனைத்து துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்
சினிமா மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அல்லது முக்கிய நபர்கள் கோவிலுக்கு வருவது தெரியவந்தால், அவர்கள் எந்த கோவிலுக்கு வருகிறார்கள், வருகை நேரம் என்ன, அவர்களுடன் எத்தனை பேர் வருகின்றனர் உள்ளிட்ட முழுமையான விவரங்களை குறைந்தது ஒரு நாள் முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்த உடனேயோ ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கோ, வீடியோ பதிவு செய்வதற்கோ எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது
பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையால் வழக்கமான பக்தர்களின் தரிசனத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அவர்களின் நுழைவு மற்றும் இயக்கத்தை கோவில் நிர்வாகம் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் புனிதத்தன்மை மற்றும் மரபு சார்ந்த ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவசியமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் அனைத்து திருக்கோவில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதில் எந்தவித விதிவிலக்கும் இல்லாமல் அதிகாரிகள் மற்றும் செயல் அலுவலர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசியல்வாதிகள், போலீசாருக்கும் கட்டுப்பாடு வருமா?
இந்நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் விஐபிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இதேபோன்ற கட்டுப்பாடுகளை அரசியல்வாதிகள் மற்றும் போலீசாருக்கும் விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கோவில்களுக்கு வரும்போது அவர்களுடன் பலர் செல்வதாகவும், வரிசையில் காத்திருக்காமல், டிக்கெட் பெறாமல் கூட்டமாக கோவிலுக்குள் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும், டிக்கெட் இல்லாமல் கோவிலுக்குள் செல்லும் அரசியல் பிரமுகர்களை கோவில் அதிகாரிகள் கண்டிப்புடன் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், போலீசாரும் டிக்கெட் இல்லாமல் பலரை கோவிலுக்குள் அழைத்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதைத் தடுக்க டிஜிபி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
