13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் கணக்குகளை உருவாக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் தனிநபர் மசோதா, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சமூக ஊடகங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்ற கவலை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகள் சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன.
இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சட்டம் இயற்றும் நோக்கில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தனிநபர் மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பெற்றோர் அனுமதி அவசியம்
பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா முன்மொழிந்துள்ள இந்த மசோதா, கடந்த நாள் பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஆனால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மசோதாவின் முன்மொழிவின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் செயலிகளில் கணக்குகளை உருவாக்க முடியாத வகையில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும்.
தனிநபர் மசோதாக்கள் பார்லிமென்டில் சட்டமாக நிறைவேறுவது அரிதான நிலையில், இந்த மசோதாவுக்கு கட்சி வேறுபாடின்றி பல்வேறு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.10 கோடி வரை அபராதம்?
இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், விதிகளை மீறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அல்லது வேண்டுமென்றே விதிமுறைகளை மீறும் தளங்களுக்கு எதிராக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவது அல்லது முடக்குவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் வயது கட்டுப்பாடு
சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் வயது அடிப்படையிலான விதிமுறைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன.
பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
