பெரும் சவால்களை எதிர்கொள்ள அஞ்சாமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவதில் இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், நாட்டின் திறமையான இளம் தலைமுறையினரை சந்திப்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கைப் பாதையும், கனவும் தனித்துவமானது என்றும், பட்டம் பெறுவது கல்விப் பயணத்தின் முடிவு அல்ல; நாட்டிற்காக சிறப்பான சாதனைகளை உருவாக்குவதற்கான புதிய பயணத்தின் தொடக்கம் என்றும் பிரதமர் கூறினார்.
தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்
உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புகளின் தன்மை தொடர்ந்து மாற்றம் அடையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் உலகம் எந்த நிலையில் இருக்கும் என்பதை இப்போது யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது என்றும், எனவே இளைஞர்கள் தங்களுடைய ஆர்வத்தை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் தங்களது கல்லூரி வாழ்க்கையை எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, இந்த காலகட்டத்தில் தங்களுக்கு உதவிய ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நன்றியுடன் நினைவுகூர்வார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சவால்களுக்கு அஞ்ச வேண்டாம்
இந்தியாவின் ஸ்டார்ட்அப் வளர்ச்சியை முன்னெடுத்ததில் இளம் தலைமுறையினருக்கு முக்கிய பங்கு இருப்பதாக பிரதமர் கூறினார். ஐஐடியில் இருந்து பல்வேறு நிறுவனங்களின் நிறுவனர்கள் உருவாகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பெரும் சவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். அவற்றுக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க துணிச்சலுடன் முயற்சி செய்யுங்கள்” என்று இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்.
மேலும், போதுமான சிந்தனை அல்லது புரிதல் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துகள் மற்றும் நடைமுறைகளை மாணவர்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும், புதிய சிந்தனைகளுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
