அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணனுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பை, மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
குற்றச்சாட்டுகளை மறுத்த தம்பதி
இந்நிலையில், வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் நேரில் ஆஜராகினர்.
அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிபதி விளக்கினார். அதனைத் தொடர்ந்து, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த இருவரும், அவை பொய்யானவை என்றும், வழக்கு விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்தார். தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
