தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படும் தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க முதல்வர் விஜய் அனைத்துக் கட்சி எம்பிக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையை திமுக முன்வைத்தது. அதேபோல், அதிமுகவும் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்திருந்தது.
19 எம்பிக்கள் பங்கேற்பு
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் மற்றும் மதிமுகவைச் சேர்ந்த 19 எம்பிக்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் எம்பிக்கள் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த் உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் வெங்கடேசன், சச்சிதானந்தம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ், சுப்புராயன், மதிமுகவின் துரை வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் எம்பி சுதா, கர்நாடகாவில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்ததால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் லோக்சபாவில் 39 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 18 எம்பிக்களும் என மொத்தம் 57 எம்பிக்கள் உள்ளனர். இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 37 எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
39 தொகுதிகளை பாதுகாக்க தீர்மானம்
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை திட்டத்தை கைவிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் தற்போது உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் விஜய், சென்னை வாலாஜா சாலையில் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் நடந்து சென்றார்.
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
கூட்டம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இதில் பங்கேற்றதாக தெரிவித்தார்.
தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் அது தமிழகத்திற்கு அநீதியாக அமையும் என்றும், கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொகுதி மறுவரையறை தமிழகத்திற்கு தேவையில்லை என்றும், தற்போதுள்ள எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு தொடர்வதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“39 தொகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்”
காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதல் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளையும் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை தொடர்பான எந்த நடவடிக்கையிலும் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
