ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஜூடோ போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் அஷ்மிதா டெ கனடா வீராங்கனை ஹைடி குவாச்சை எதிர்கொண்டார். தொடக்கம் முதல் கடும் போட்டி நிலவிய நிலையில், இருவரும் தலா ஒரு புள்ளி பெற்றதால் ஆட்டம் கோல்டன் ஸ்கோர் முறைக்கு சென்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த மோதலில், அஷ்மிதா டெ 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்தார். இதற்கு முன் அரையிறுதியில், ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனை கோல்டன் ஸ்கோர் முறையில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியிலும் இந்தியாவின் ஹர்ஷ் சிங் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மேலும் உயர்த்தினார்.
இந்த இரு வெற்றிகளின் மூலம், ஜூடோ போட்டியில் ஒரே நாளில் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதுவரை இந்தியா 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
