பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற்றது. தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக தெரிவித்திருந்தார்.
தற்போதைய சட்டத்தின் கீழ், பொதுத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல், இத்தகைய குற்றங்களை அரசிடம் தெரிவிக்கத் தவறும் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும், ரூ.10 கோடி அபராதம் விதிக்கவும் சட்டத்திருத்தத்தில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம், 2024-இல் மேற்கொள்ளப்படும் இந்த திருத்த மசோதா வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
