தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளார் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே முதல்வர் விஜய் கர்நாடகா செல்கிறார் என்றார்.
மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இது தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை என்பதால் அந்த நிலைப்பாட்டை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அமைச்சர் வினோத் கூறினார்.
கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் காவிரி நீரை திறக்க முடியவில்லை என்று அங்குள்ள அரசு தெரிவித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இருப்பினும் தமிழகத்தின் உரிமையான காவிரி நீரைப் பெறுவதற்காக முதல்வர் விஜய் உரிய முறையில் வலியுறுத்துவார் என்றும் தெரிவித்தார்.
காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடைபெறவுள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
