நீட் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, நீட் வினாத்தாள் கசிவு குறித்த தகவல்கள் வெளியானவுடன் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.
இதுவரை இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலனை பாதுகாப்பதற்கும் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் நீட் மறுதேர்வு முன்னுரிமையுடன் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் தாமதமின்றி வெளியிடப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டதாக கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களின் உதவியுடன் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் அண்மைக் கால வளர்ச்சி சாதனைகள் குறித்தும் பிரதமர் விளக்கியதாக தெரிவித்த கிரண் ரிஜிஜூ, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்ததாக கூறினார்.
