பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் ஆன்டி பர்ன்ஹாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா–பிரிட்டன் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற ஆன்டி பர்ன்ஹாமுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவும் பிரிட்டனும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுவான கூட்டாண்மையை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே அமலுக்கு வந்துள்ள வர்த்தக ஒப்பந்தம் (CETA) இந்தியா–பிரிட்டன் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த புதிய பிரதமருடன் நெருக்கமாக இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
