உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரை வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
‘எம்.வி. கோல்டன் லியோ’ (MV Golden Leo) என்ற வணிகக் கப்பலில் தாக்குதல் நடைபெற்றபோது, மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 5 பேர் இந்தியர்கள். தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது, அப்பாவி கப்பல் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மற்றும் சர்வதேச கடல் போக்குவரத்து, வர்த்தக சுதந்திரத்தை பாதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பி, அவரை நேரில் அழைத்து இந்தியாவின் கடும் கண்டனத்தை வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு இந்திய மாலுமிகள் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்காவிடமும் இந்தியா தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
