இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட இலக்குகளை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பவன் குமார் சந்தானா பகிர்ந்துள்ளார்.
‘விக்ரம்-1’ வெற்றியின் மூலம், தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டை வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்திய உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும், சுற்றுப்பாதையில் ராக்கெட்டை நிலைநிறுத்திய முதல் இந்திய தனியார் நிறுவனமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய பவன் குமார் சந்தானா, ராக்கெட் ஏவுதலுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருவதாகவும், இந்திய அரசின் செயற்கைக்கோள் கூட்டமைப்பு (Satellite Constellation) திட்டங்கள் உள்நாட்டு ஏவுதல்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், முதல் ஏவுதலின் தரவுகளை ஆய்வு செய்து தேவையான தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொண்டு, எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
“2027-ஆம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு ‘விக்ரம்-1’ ராக்கெட்டை ஏவக்கூடிய உற்பத்தித் திறனை உருவாக்குவதே எங்களின் இலக்கு. முதல் ஏவுதலில் ஏவுதளத்தை விட்டு புறப்படுவதே முக்கிய நோக்கமாக இருந்தாலும், செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதால் இது 100 சதவீத வெற்றிகரமான பயணம்” என்று பவன் குமார் சந்தானா தெரிவித்தார்.
விக்ரம்-1 வெற்றி, இந்திய தனியார் விண்வெளி நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனையும், உலகளாவிய போட்டித்திறனையும் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
