பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் விண்வெளி சாதனைகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை பாராட்டியதுடன், 56 வயதில் தன்னை இளைஞர் எனக் கூறிக்கொள்வோருக்கான காலம் அல்ல என்றும் மறைமுகமாக விமர்சித்தார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெற்று, நாட்டின் வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சமீபத்தில் விக்ரம்-1 திட்டம் வெற்றி பெற்றது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளை படைத்து வருவதாகவும் கூறினார்.
விண்வெளித் துறை, தொழில்நுட்பம் மற்றும் புதுமை முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக குறிப்பிட்ட அவர், உலகின் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகப்படுத்தியதையும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவதையும் சுட்டிக்காட்டினார். மேற்காசியப் போரால் ஏற்பட்ட சவால்களையும் இந்தியா திறம்பட சமாளித்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஸ்கைரூட் நிறுவனத்தில் பணியாற்றும் குழுவின் சராசரி வயது 28 மட்டுமே என்றும், அந்த இளைஞர்களே விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளதாகவும் மோடி பாராட்டினார்.
அப்போது, “இது இளைஞர்களின் காலம். 56 வயதில் தன்னை இளைஞர் என்று கூறிக் கொள்வோருக்கான காலம் அல்ல” என்று அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து, 56 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
