சண்டிகர்: சுகாதார சேவைகளைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றும், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மருத்துவ உள்கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் சுமார் ரூ.4,700 கோடி மதிப்பிலான சுகாதாரம், கல்வி மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர், நாட்டின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.
தூய்மை இந்தியா (Swachh Bharat) இயக்கம் குறித்து பேசிய அவர், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டதுடன், பொது இடங்களில் தூய்மையை மேம்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். தூய்மையை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2014-க்கு பிறகு 15 புதிய எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான புதிய மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் அதிகரித்து, எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் அனைத்து நிலைகளிலும் சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
காசநோயை ஒழிக்கும் முயற்சிகள் குறித்தும் பேசிய அவர், உரிய நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால், நோயாளிகளில் பெரும்பாலானோர் சிகிச்சை பெறுகின்றனர் என்றார். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் காசநோயாளிகளின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியா உலக நாடுகளிடம் உதவி கேட்காமல், பல நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியதையும் பிரதமர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
