புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க்) அமைப்பு பிறர் நலனுக்காக இடையறாது ஓடும் கங்கை நதியைப் போன்றது என்றும், கடந்த 100 ஆண்டுகளாக தன்னலமற்ற சமூக சேவையின் மூலம் பல தலைமுறையினருக்கு ஊக்கமளித்து வருவதாகவும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘RSS @ 100: Century of Service, Unity and Sacrifice’ என்ற நூலை துணை ஜனாதிபதி வெளியிட்டு பேசினார். ஷ்யாம் ஜாஜு மற்றும் அனுபம் திரிவேதி ஆகியோர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்த நூலை எழுதியுள்ளனர்.
அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தனக்கு நீண்டகால தொடர்பு இருப்பதாகவும், தமிழில் இயற்றப்பட்ட ‘சங்கம் என்னும் புனித கங்கை’ என்ற கவிதையில், பிறருக்காக தன்னலமின்றி ஓடும் கங்கை நதியுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த நூற்றாண்டாக நாட்டின் பண்பாட்டு வேர்கள், பாரம்பரியம் மற்றும் மரபுகளை பாதுகாப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், பேரிடர் நிவாரணம், கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைப்பின் தன்னார்வ பணிகள் பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த நூலில், பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்வயம் சேவக் முதல் பிரதான் சேவக் வரையிலான பயணம் மற்றும் “நாடு முதன்மை” என்ற அவரது அணுகுமுறையும் இடம்பெற்றுள்ளதாக சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
