லக்னோ: பகவான் கிருஷ்ணர் குறித்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அந்தக் கருத்துக்கு பதிலளித்த ஹிந்து மதத் தலைவரின் பரிசு அறிவிப்பும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜார்க்கண்டில் நடைபெற்ற மதக் கூட்டம் ஒன்றில் பேசிய இஸ்லாமிய மதகுரு மவுலானா ஜர்ஜிஸ் அன்சாரி, “பகவான் கிருஷ்ணர் ஒரு முஸ்லிம்; அவர் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தினார்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது கருத்துக்கு பகவத் கீதையின் 6-வது அத்தியாயத்தை மேற்கோளாகக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்த கருத்துக்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் மற்றும் மத அறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பகவத் கீதையில் இதுபோன்ற கருத்துகள் இடம்பெறவில்லை என்றும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்தப் பேச்சு அமைந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் லக்னோ போலீசார் மவுலானா ஜர்ஜிஸ் அன்சாரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அயோத்தியைச் சேர்ந்த ஹிந்து மதத் தலைவர் மஹா மண்டலேஷ்வர் விஷ்ணு தாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், மவுலானாவின் கருத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும், அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான பரிசு அறிவிப்பையும் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்தும் பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
