இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன், ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.-29 விண்கலம் மூலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) சென்றடைந்துள்ளார்.
49 வயதான அனில் மேனன் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார். கஜகஸ்தானின் பைகோனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் எம்.எஸ்.-29 விண்கலத்தில், ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் அவர் பயணம் செய்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அனில் மேனன் சுமார் 8 மாதங்கள் தங்கி பல்வேறு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்.
நீண்டகால விண்வெளி பயணங்கள் மனித உடலின் ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம் மற்றும் உடலியல் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து தனது உடலையே ஆய்வுப் பொருளாகக் கொண்டு அவர் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், பூமியின் நேரடி உதவியின்றி விண்வெளி வீரர்கள் தாங்களே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மருத்துவ கருவிகள் மற்றும் புவிஈர்ப்பு விசையற்ற சூழலில் செமிகண்டக்டர்கள் தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகளிலும் அவர் பங்கேற்க இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
