காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில், சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை (Non-Bailable Warrant) தேசிய புலனாய்வு முகமை (NIA) சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (TRF)’ பொறுப்பேற்றது.
இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (NIA), அண்மையில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரும், 2008 மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சதித் திட்டக்காரராகக் கருதப்படும் ஹபீஸ் சையத்தின் பெயரையும் சேர்த்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சர்கோதாவைச் சேர்ந்த ஹபீஸ் சையத் கைது நடவடிக்கையில் இருந்து திட்டமிட்டு தலைமறைவாக இருந்து வருவதாகவும், பஹல்காம் தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் NIA நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து, NIA சிறப்பு நீதிமன்றம் ஹபீஸ் சையத்திற்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து, அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜம்மு NIA டிஐஜிக்கு உத்தரவிட்டுள்ளது.
