அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படும் சம்பவங்களை உடனடியாக புகார் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய வாட்ஸ்அப் புகார் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும் dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் புகார்கள் அனுப்பலாம்.
இதுதவிர, 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142 ஆகிய தொலைபேசி எண்களிலும் புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இந்த புகார் விவரங்களை தங்களது இணையதளங்களில் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களின் முக்கிய இடங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள், அரசு துறை செயலாளர்கள் மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
