பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மொத்தம் ரூ.2.19 லட்சம் கோடி மதிப்பிலான ஏழு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் செமிகண்டக்டர் 2.0, மொபைல் போன் உற்பத்தி, உரம் தொடர்பான தேசிய முதலீட்டு கொள்கை, சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாரணாசியில் வருணா நதிக்கரையோரம் ரூ.10,998 கோடி மதிப்பில் 6/4 வழிச்சாலை திட்டமும், கங்கை நதிக்கரையோரம் ரூ.14,448 கோடி செலவில் ஆறு வழிச்சாலை திட்டமும் செயல்படுத்தப்படும் என்றார்.
செமிகண்டக்டர் 2.0 திட்டத்திற்கு ரூ.1,27,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மொபைல் போன் உற்பத்தி திட்டத்திற்கு ரூ.62,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொபைல் உற்பத்தி மதிப்பு ரூ.39 லட்சம் கோடியாக உயரவும், ஏற்றுமதி ரூ.15 லட்சம் கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 60,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரம் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய தேசிய முதலீட்டு கொள்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனுடன், ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் புதிய ரயில்வே திட்டங்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
