2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த விமானப்படை நாடுகளின் பட்டியலில், இந்தியா தொடர்ந்து 5வது ஆண்டாக 3வது இடத்தை தக்கவைத்துள்ளது.
உலகளாவிய ராணுவ விமானப்படைகளை மதிப்பீடு செய்யும் WDMMA (World Directory of Modern Military Aircraft) அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தரவரிசை, 103 நாடுகளைச் சேர்ந்த 129 வான்வழி சேவைகள் மற்றும் 48,000-க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்களின் திறனை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டில், விமானங்களின் எண்ணிக்கை, நவீன தொழில்நுட்பம், தளவாட வசதிகள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், சீனா 7வது இடத்திலும், பாகிஸ்தான் 18வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
தற்போது இந்திய விமானப்படையில் 1,716 விமானங்கள் உள்ளன. இதில் 542 போர் மற்றும் தாக்குதல் விமானங்கள், 498 ஹெலிகாப்டர்கள், 282 போக்குவரத்து விமானங்கள், 374 பயிற்சி விமானங்கள் மற்றும் 20 சிறப்புப் பணி விமானங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்திய விமானப்படையில் 222 Mi-17 ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 111 HAL துருவ் மற்றும் ருத்ரா ஹெலிகாப்டர்கள் சேவையில் உள்ளன. சீனாவிடம் மொத்த விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் இந்திய விமானப்படை முன்னிலை வகிப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
