தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக பணியாற்றி வந்த அருண், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அருண், சட்டசபைத் தேர்தல் காலத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பின்னர் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அந்தப் பொறுப்பில் இருந்த காலத்தில், வாரந்தோறும் பல்வேறு அரசு துறைகளில் ஒருங்கிணைந்த சோதனைகளை நடத்தி, லஞ்ச வழக்குகளில் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அதிகாரிகள் தொடர்பான விவரங்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
இதற்கிடையில், முந்தைய ஆட்சிக் காலம் தொடர்பாக அருணின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளும் அரசியல் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தன.
தற்போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த அருண் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்பு விசாரணைக் குழு–1-ன் ஐஜியாக உள்ள மகேஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரின் கூடுதல் பொறுப்பையும் கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
