சென்னை: ஊழலை ஒழிப்பதாக அனைவரும் பொதுவெளியில் பேசினாலும், அதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி பதவி வகித்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கே.எஸ். கந்தசாமி மற்றும் கே. விஜயகார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி 2025 நவம்பரில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை இன்னும் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தக் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களுடன் அரசு தரப்பு அடுத்த விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விசாரணையின்போது நீதிபதி கூறுகையில், “ஊழலை ஒழிப்பதாக அனைவரும் மைக் முன் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குற்றம் நடந்த ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அடுத்த தேர்தலும் முடிந்துவிட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று கருத்து தெரிவித்தார்.
