ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் (TRF) ஆகும்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து, முன்பு 1,597 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. தற்போது, ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது.
அதில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரும் சர்வதேச பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெற்ற விசாரணையில், ஹபீஸ் சயீதுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை (Non-Bailable Warrant) சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ள ஹபீஸ் சயீத், 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதித் திட்டமிடுபவராகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
