சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. எஸ். ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்த உறுப்பினர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாஜக நிர்வாகியுமான கே. வெங்கடாஜலபதி பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்கு முடிவடையும் முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற அரசியல் சாசன சிக்கல் உருவாகும் என்று வாதிட்டார்.
இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் வாதம் சட்டரீதியாக ஏற்கத்தக்கதல்ல என்றும், தேர்தல் வழக்குகள் தொடர்பான முழுமையான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தேர்தல் வழக்குகள் தொடரப்படுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டதாக விளக்கமளித்தார். முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி, மனுதாரருக்கு இந்த வழக்கைத் தொடர உரிமை இல்லை என்றும், இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுப்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்றும் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேர்தல் வழக்கு முடிவடைவதற்கு முன் இடைத்தேர்தல் நடத்தினால் அரசியல் சாசன ரீதியான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டது. மேலும், மத்திய அரசு, தேர்தல் ஆணையம், தமிழக சட்டசபை செயலர், முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.
அதுவரை, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
