கரூர்: கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்ததுடன், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
கரூர் வெண்ணெய்மலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்க்கு, திருவள்ளுவர் சிலை மற்றும் வெள்ளி வாள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனது அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத வேதனையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
பெரம்பலூர் கூட்டம் அதிக நெரிசல் காரணமாக பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய விஜய், அதேபோல் கரூர் நிகழ்ச்சியிலும் போலீசார் முன்கூட்டியே எச்சரித்து கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம் என்றார். கரூர் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தனது ஆட்சியில் லஞ்சமற்ற நிர்வாகம் நடைபெற்று வருவதாக கூறிய முதல்வர், அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதையுடன் சேவை வழங்கப்படுவதாக தெரிவித்தார். அண்ணா பிறந்தநாளில் ‘தாய்மாமன் மோதிரம்’ திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், பல்வேறு துறைகளில் ஊழல் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிய தொழில் முதலீடுகள் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். மேகதாது அணை வழக்கு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்களையும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இறுதியாக, “திமுக தாங்களாக திருந்தப் போவதில்லை. நீதிமன்றம் எச்சரித்தும் மாற்றம் இல்லை. வரும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என்று விஜய் வலியுறுத்தினார்.
