ஆக்லாந்து: இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது கட்ட அரசுமுறை பயணமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரை சென்றடைந்தார். அங்கு அவரை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் விமான நிலையத்தில் நேரில் வரவேற்று கட்டியணைத்தார்.
பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நியூசிலாந்து அமைச்சர்கள், இந்திய அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் அவரை வரவேற்றனர்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் மோடிக்கு கிடைத்துள்ளது.
ஆக்லாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “நியூசிலாந்தில் வாழும் இந்தியர்களின் அன்பும் பாசமும் என்னை நெகிழச் செய்தது. இந்திய பிரதமரின் வருகைக்காக அவர்கள் நான்கு தசாப்தங்களாக காத்திருந்தனர். இந்தியாவுடனான அவர்களின் பிணைப்பு உறுதியானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆக்லாந்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரியம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டதாகவும், பஞ்சாப், தமிழகம், கர்நாடகா மற்றும் ஹிந்துஸ்தானி இசை மரபுகள் இடம்பெற்ற நிகழ்ச்சி மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் பண்பாட்டை வெளிநாடுகளில் உயிர்ப்புடன் பாதுகாத்து, இந்தியா–நியூசிலாந்து மக்களிடையேயான உறவை வலுப்படுத்தி வரும் இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார்.
