சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் விஜய் முன்அறிவிப்பின்றி நேரில் சென்று மருத்துவ சேவைகள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்தார்.
தான் பிறந்ததாகக் கூறப்படும் இந்த மருத்துவமனையில் பல்வேறு வார்டுகளை பார்வையிட்ட முதல்வர், மகப்பேறு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவமனையில் வழங்கப்படும் சுகாதார சேவைகள், நோயாளிகளுக்கான வசதிகள் மற்றும் மேம்பாட்டு தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்களிடம் அவர்களின் உடல்நலம் மற்றும் குழந்தைகளின் நலம் குறித்து விசாரித்தார். மேலும், குழந்தைகளை கையில் ஏந்தி கொஞ்சியதுடன், மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது அமைச்சர் அருண் ராஜ் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், எழும்பூர் மருத்துவமனையை தொலைநோக்கு பார்வையுடன் மேம்படுத்தும் திட்டம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மருத்துவமனை வளாகத்தில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை உறவினர்களுக்கு காண்பிப்பதற்காக பணம் கேட்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் யாரேனும் பணம் கேட்டாலோ அல்லது கட்டாயப்படுத்தினாலோ, பொதுமக்கள் 104 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும், அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் அமைப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
