குஜராத்தின் ஆமதாபாதில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், 38 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையையும், 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2008 ஜூலை 26-ஆம் தேதி ஆமதாபாத் நகரின் 14 இடங்களில் 70 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகளையும் குறிவைத்து வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 2022-ஆம் ஆண்டு இந்த வழக்கை “அரிதினும் அரிதான வழக்கு” எனக் குறிப்பிட்டு, 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஒய். காக்ஜே மற்றும் சமீர் தவே அமர்வு தள்ளுபடி செய்தது. இதன் மூலம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைகள் தொடர்ந்தும் அமலில் இருக்கும்.
வழக்கு விசாரணையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 2007-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட சிமி (SIMI) அமைப்பு நடத்திய ரகசிய முகாமில் இந்த தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரியவந்தது. மேலும், 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதலை இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு மேற்கொண்டதாக விசாரணையில் கூறப்பட்டது.
இதனிடையே, வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, சிறைக்குள் 213 அடி நீள சுரங்கம் தோண்டி 24 குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயன்றதும், அந்த முயற்சி அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
