இந்தோனேஷியா பயணத்தின் போது ஜகார்த்தாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சி, நலத்திட்டங்கள் மற்றும் இந்தியா-இந்தோனேஷியா உறவுகள் குறித்து விரிவாக பேசினார்.
இந்தியாவின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், எரிசக்தி முதல் சிப் உற்பத்தி வரை பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக தெரிவித்தார். ஆசியான் பிராந்தியத்தில் இந்தியாவின் தற்சார்பு வளர்ச்சி முக்கிய பங்காற்றும் என்றும் கூறினார்.
இந்தோனேஷியா மக்களும், அந்நாட்டு அதிபரும் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், தமக்கு வழங்கப்பட்ட உயரிய விருது 140 கோடி இந்தியர்களுக்குக் கிடைத்த கவுரவம் என்றும், அது இரு நாடுகளின் நட்பின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் புவியியல் தொடர்புகள் ஆழமானவை என்றும், இந்தியாவின் நிக்கோபார் தீவுக்கும் இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்துக்கும் இடையே வெறும் 150 கிலோமீட்டர் தூரம்தான் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற காப்பீட்டு திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தத் திட்டங்களின் மூலம் இதுவரை சுமார் ரூ.22 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்க்கையில் நெருக்கடி ஏற்பட்டபோது அரசு உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.
நேரடி பணப்பரிமாற்ற (DBT) திட்டம் மூலம் அரசின் நலத்தொகைகள் எந்தவித முறைகேடும் இன்றி நேரடியாக பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, சமீபத்தில் இந்தியாவில் திறக்கப்பட்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறிய பிரதமர், உலகின் முன்னணி சுத்திகரிப்பு திறன் கொண்ட நாடுகளில் இந்தியா தற்போது இடம்பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
