கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்து, தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை திமுக பின்னர் வாபஸ் பெற்றது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் சூழலில், வழக்கின் தன்மையை பாதிக்கும் வகையில் பொதுக் கருத்துகள் வெளியிடப்படுவதாகக் கூறி, சம்பந்தப்பட்டோர் வழக்கு குறித்து பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (ஜூலை 7) நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, “இது பேச்சு சுதந்திரத்துக்கு தடை கோரும் மனுவா? யாராவது கருத்து தெரிவித்தால் அதற்கு பதிலாக நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை எவ்வாறு பிறப்பிக்க முடியும்?” என்று நீதிபதி விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், சம்பந்தப்பட்டோரின் கருத்துகள் வழக்கின் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், நிவாரணம் அறிவிப்பது அல்லது கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது வழக்கு விசாரணையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கில் உள்ள விவரங்கள் குறித்து நீதிமன்றத்தில் அரசியல் விவாதம் நடத்த முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்யும் நிலைப்பாட்டை நீதிமன்றம் தெரிவித்த நிலையில், திமுக தரப்பு தனது இடைக்கால மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அதன்படி, மனு வாபஸ் பெறப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.
