கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி அருகே உள்ள கல்லடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தகவலின்படி, சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வயநாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பிரியங்கா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாநில அரசு, போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் பதிவான மழை அளவு (மி.மீ.)
- மேப்பாடி – 226
- லக்கிடி – 210
- புத்துமலா – 202
- கல்லடி – 188
- நீராவரம் – 180
- அலட்டில் வட்டொலி – 172
- கன்ஹோம் – 170
- நீலிக்காப்பு – 160
- கப்பிக்களம் – 152
- வல்லம்தோடு – 147
- மங்கலசேரி மலை – 144
- மீனங்காடி – 143
- பாணாசுரா – 140
- எலம்பிலேரி – 21
