இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமபனன் (Prambanan) சிவன் கோவில் புனரமைப்புப் பணிக்கு இந்தியா தொழில்நுட்ப மற்றும் தொல்லியல் உதவி வழங்க உள்ளது. இந்தப் பணியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இந்தோனேஷியா அதிபர் பிரபோவ் சுபியான்டோவும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.
யோக்யார்த்தா நகரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிரமபனன் கோவில், சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய இந்து கோவில் வளாகமாகும். கம்போடியாவின் அங்கோர் வாட்டிற்கு அடுத்தபடியாக ஆசியாவின் இரண்டாவது பெரிய இந்து கோவில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த கோவில் வளாகத்தில் மொத்தம் 240 கோவில்கள் உள்ளன. மையத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் சுமார் 154 அடி உயரம் கொண்டதாகும். கோவிலைச் சுற்றியுள்ள சுவர்களில் ராமாயணக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இதன் வரலாற்று மற்றும் கலாசார சிறப்பை கருத்தில் கொண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்துள்ளது.
11-ஆம் நூற்றாண்டின் அரசியல் மாற்றங்கள், 2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை மற்றும் வரலாற்றுச் சம்பவங்களால் கோவில் பல்வேறு சேதங்களை சந்தித்தது. இதையடுத்து மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளில் இந்திய தொல்லியல் துறையும் இந்தோனேஷியா அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட உள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “யோக்யார்த்தாவில் அமைந்துள்ள பிரமபனன் கோவிலின் புனரமைப்புப் பணியை அதிபர் பிரபோவ் சுபியான்டோவுடன் இணைந்து தொடங்கி வைப்பது பெருமை அளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக இந்த கோவில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையேயான கலாசார உறவின் அடையாளமாக விளங்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
