அசாம் மாநில சட்டசபையின் அலுவல் மொழிகளில் ஹிந்தியும் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில வரலாற்றில் முதல்முறையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், இனி சட்டசபை உறுப்பினர்கள் ஹிந்தி மொழியிலும் உரையாற்ற முடியும்.
இதுவரை அசாம் சட்டசபையின் அலுவல் மொழிகளாக அசாமி, போடோ மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது ஹிந்தியும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து சட்டசபை சபாநாயகர் ரஞ்சித் குமார் தாஸ் கூறுகையில், தனது தலைமையில் நடைபெற்ற சட்டசபை குழுக் கூட்டத்தில் ஹிந்தியை அலுவல் மொழியாக சேர்க்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், ஹிந்தி மொழிக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
புதிய நடைமுறையின்படி, அசாம் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 6 முதல், உறுப்பினர்கள் ஹிந்தி மொழியிலும் அவையில் உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
