சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த தேர்தல் அனுபவம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார்.
அவர் பேசுகையில், “திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுவதும், சேவை செய்வதுமே எங்கள் இயக்கத்தின் அடிப்படை நோக்கம். வெற்றியும் தோல்வியும் அரசியலின் ஒரு பகுதிதான். ஆனால் மக்களுடன் தொடர்ந்து நிற்பவர்களே கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள்” என்றார்.
மேலும், “அனைத்து வகையான வெற்றி, தோல்விகளையும் திமுக சந்தித்துள்ளது. அதிமுகவைப் பிளவுபடுத்த முடிந்தவர்களால் கூட திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது. ஆளுங்கட்சியை விட திமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
தற்போதைய ஆட்சியை விமர்சித்த அவர், “ரீல்ஸ் வெளியிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். எம்எல்ஏக்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் ரீல்ஸ் வெளியிடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்” என குற்றம்சாட்டினார்.
கடந்த தேர்தலை நினைவுகூர்ந்த அவர், “அப்போது நமது உண்மையான அரசியல் எதிரி யார் என்பது தெளிவாக தெரியவில்லை. யாரை தோற்கடிக்க வேண்டுமோ அவர்களை தோற்கடித்தோம். தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்தோம். ஆனால் நமது சொந்த ஆதரவை முழுமையாக ஒருங்கிணைக்க தவறிவிட்டோம். தற்போது எங்களின் உண்மையான எதிரி யார் என்பது தெளிவாகியுள்ளது. அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் ஜனநாயக ரீதியில் தோற்கடிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “திமுகவை மிரட்டல்களாலும், அச்சுறுத்தல்களாலும் யாராலும் பணிய வைக்க முடியாது. மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம். ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வோம்” என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
