40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வதால், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வரும் 6 முதல் 11 வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் இந்தோனேஷியா செல்லும் அவர், பின்னர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன் பிறகு நியூசிலாந்து சென்று தனது அதிகாரப்பூர்வ பயணத்தை நிறைவு செய்கிறார்.
இதுகுறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு வருவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு எனக் குறிப்பிட்டார். இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும், இரு நாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தியா – நியூசிலாந்து இடையே சமீபத்தில் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
