பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 4) ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் ரூ.480 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையக் கட்டடத்தை அவர் திறந்து வைக்கிறார். ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பயணிகளை கையாளும் திறனுடன் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பலோத்ராவில் நகர்ப்புற போக்குவரத்து, ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நாட்டின் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோ கெமிக்கல் வளாகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
அதேபோல், ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
மாலை நேரத்தில் குஜராத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை திறந்து வைத்து, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தை வழங்க உள்ளார்.
