அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் முறைகேட்டுக்கு உள்ளானதாக வெளியாகியுள்ள தகவல், லட்சக்கணக்கான ராம பக்தர்களுக்கு மிகுந்த வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் கோரிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் அனைவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை அறக்கட்டளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் மீது பக்தர்கள் வைத்துள்ள நம்பிக்கையும் பக்தியும் தொடர்ந்து நிலைத்திருக்க, வெளிப்படையான விசாரணை மற்றும் உரிய நடவடிக்கைகள் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
