Narendra Modi மற்றும் Takako Takayachi டெல்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தியா–ஜப்பான் உறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து கருத்துகளைப் பகிர்ந்தனர்.
பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவிற்கு முதல்முறையாக வருகை தந்துள்ள ஜப்பான் பிரதமர் டகாயச்சியை வரவேற்பதாக தெரிவித்தார். ஜப்பானின் முதல் பெண் பிரதமரான அவர், கொள்கை மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்கிறார் என்றும் பாராட்டினார்.
சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையே மிகப்பெரிய பலம் என்று தான் வலியுறுத்தியதாக குறிப்பிட்ட மோடி, அந்த வகையில் இந்தியா–ஜப்பான் உறவு காலத்தின் சோதனையை வெற்றிகரமாக கடந்து வலுப்பெற்றுள்ளதாக கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றி வருவதாகவும், ஜப்பான் பிரதமரின் இந்த வருகை இரு நாடுகளின் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக விளங்கும் இந்தியா மற்றும் ஜப்பான், விதிமுறைகள் அடிப்படையிலான சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக கூறினார். உலக அமைதி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் முயற்சிகளில் இரு நாடுகளும் முன்னின்று செயல்பட்டு உலகிற்கு வழிகாட்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ஜப்பான் பிரதமர் டகாயச்சி, உலகின் முக்கிய பொருளாதார சக்திகளாக இந்தியாவும் ஜப்பானும் இணைந்து சுதந்திரமான மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க உறுதியாக செயல்படுவதாக கூறினார். இந்த ஒத்துழைப்பு மூலம் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
