தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்த அவர்கள் ஆற்றி வரும் சேவையை பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக மருத்துவர்கள் திகழ்கிறார்கள் என்றும், அவர்களின் அர்ப்பணிப்பு, கருணை மற்றும் அயராத உழைப்புக்கு நன்றி தெரிவித்தார். கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் வழங்கும் சேவை மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இருமடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இந்த வளர்ச்சி, மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தரமான மருத்துவச் சேவை சென்றடைய உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சுகாதார மேம்பாடு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அனைவருக்கும் மலிவான, எளிதில் கிடைக்கும் மருத்துவச் சேவையை வழங்குவதில் மருத்துவர்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனுடன், பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டியும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பட்டயக் கணக்காளர்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும், வெளிப்படைத்தன்மை, தொழில்முறை திறன் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் அவர் பாராட்டினார்.
