சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை இன்று (ஜூலை 1) முதல் ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு வணிக சிலிண்டர் ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வணிக காஸ் சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பின்னர் அமெரிக்கா–ஈரான் இடையே ஏற்பட்ட அமைதி சூழல் காரணமாக பிராந்திய பதற்றம் குறைந்ததைத் தொடர்ந்து, பெட்ரோலிய அமைச்சகம் அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியது.
இதன் தொடர்ச்சியாக, வணிக சிலிண்டர் விலையில் குறிப்பிடத்தக்க குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் விலை ரூ.928.50 என்ற நிலையில் தொடர்கிறது.
