ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கன்னிகாபுரத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழ்மின்னல் மதுரா கன்னிகாபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலமான புல எண் 148-ல் 105-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஐந்து தசாப்தங்களாக வீடுகள் அமைத்து வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் அரசுக்கு முறையாக வரி செலுத்தி வருவதுடன், தெருவிளக்கு, சாலை, குடிநீர், மின் இணைப்பு, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் பெற்றுள்ளனர். இருப்பினும், வீட்டுமனை பட்டா இதுவரை வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகம் முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை பலமுறை மனுக்கள் அளித்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும்கூட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பட்டா வழங்கும் கோப்புகள் தொடர்பாக அதிகாரிகள் முரண்பட்ட தகவல்களை வழங்கி வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். ஒரு தரப்பினர் கோப்புகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இல்லை எனக் கூறிய நிலையில், மாவட்ட நிர்வாகம் நில நிர்வாக ஆணையம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு கருத்துரு அனுப்பியதாக தெரிவித்துள்ளது. ஆனால், சென்னை அலுவலகங்களில் அத்தகைய கோப்புகள் வரவில்லை என கூறப்படுவது அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கன்னிகாபுரம் மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதுடன், இரத்தினகிரி–கன்னிகாபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து ஆற்காடு வழியாக வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கன்னிகாபுரம் கிளைத் தலைவர் எம். தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் இரா. சரவணன், மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், தாலுகா செயலாளர் ஆர். மோகன் ராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி. சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
