தென்காசி: பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக ‘ஸோஹோ’ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளுக்கான அரசு அங்கீகார நடைமுறைகள் குறித்து தான் முன்வைத்த கருத்து சரியானது என்றார். ஏற்கனவே சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான அங்கீகாரக் கட்டணங்கள் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிறகு, பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டதாகவும் ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
மேலும், பள்ளிக்கல்வித் துறையைப் போலவே ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான அனுமதிக் கட்டணங்களுக்கும் வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவ்வாறு செய்தால் முறைகேடுகள் மற்றும் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைக்கு அரசியல் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
