தூத்துக்குடி: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் விரிவாக மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நீளமான ஓடுபாதை (ரன்வே) அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு கப்பல் கட்டும் தளம் உருவாக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாகவும் கூறினார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுதோறும் ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை நிதி வழங்கப்பட்டு வருவதாக எல்.முருகன் தெரிவித்தார்.
