சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) வரும் 29-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் ஏரியின் நீர்வரத்து பகுதிகளான தண்டலம், மேவளூர்குப்பம், செட்டிப்பேடு, கீவளூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீட்டு கழிவுநீர், மருத்துவமனை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கால்வாய்கள் வழியாக ஏரியில் கலப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல ஆண்டுகளாக ஏரியில் கலப்பதால், நீரின் தரம் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், ஏற்கனவே தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் அறிக்கை கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர், சிப்காட் நிர்வாகத்தையும் வழக்கில் இணைத்து, தொழிற்சாலை கழிவுநீர் ஏரியில் கலப்பது தொடர்பாக வரும் 29-ஆம் தேதிக்குள் விரிவான பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
