ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அமர்வில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உண்மையான வெற்றி என்பது சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில்தான் இருப்பதாக வலியுறுத்தினார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், உலக நாடுகள் மத்தியில் செயற்கை நுண்ணறிவு இன்று மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மனித வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் ஏ.ஐ.க்கு இருப்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றும் தெரிவித்தார்.
ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே வெற்றியின் அளவுகோல் அல்ல என்றும், அந்த தொழில்நுட்பம் சாதாரண மக்களின் வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக்கி, அவர்களின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு உதவுகிறது என்பதே அதன் உண்மையான மதிப்பை நிர்ணயிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக பயனளிக்கும் வகையில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்றும், மனித மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றமே எதிர்கால வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
